தமிழ்நாடு அரசு நிதி நல்கையுடன் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து “செவ்வியல் இலக்கியங்களின் சிறப்பு” என்னும் பொருண்மையில் இரண்டு நாள் (11.07.2024 & 12.07.2024) தேசியக் கருத்தரங்க நிகழ்வை நடத்தியது.

முனைவர் வீ.ப. ஜெயசீலன் (இ.ஆ.ப), மாவட்ட ஆட்சியர், விருதுநகர் மாவட்டம், அவர்கள் கருத்தரங்கிற்கு நிதி நல்கியும் கருத்தரங்க நிகழ்வினை துவங்கியும் வைத்து தலைமையுரை ஆற்றினார். சங்க இலக்கியப் பாடற் சிறப்பும், அவை உணர்த்தும் விழுமியங் எக்காலத்தும் நிலைபெற்றிருக்கும் என்ற உண்மையைத் தலைமையுரையில் எடுத்துரைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் கருத்தரங்கம் துவங்கியது. கல்லூரி முதல்வர் முனைவர் பெ. இராஜகுரு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பொ. இராமநாதன், முனைவர் மூ. கவிதா, முனைவர் பி. ஸ்ரீதேவி வரவேற்புரை நல்கினார்கள்.
மாணவர்களின் ஓவியக் கண்காட்சியைத் துவக்கி வைத்துத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணை இயக்குநர் முனைவர் சங்கர சரவணன் அவர்கள் “சங்கத்தின் தங்கம் குறள்” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
சேரை ப. பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் “தெவிட்டாத் தெள்ளமுது” எனும் தலைப்பில் இன்றைய மாணவர்களும் விரும்பும் வண்ணம் திருக்குறளின் இனிமையை மிகச் சுவையாக எடுத்துரைத்தார்.
இரண்டாம் நாள் (12.07.2024) முதல் அமர்வில் முனைவர் வாணி அறிவாளன் அவர்கள் “சங்க அகத்திணைக் கோட்பாடுகள்:- புத்துரை” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றி, மாணவர்கள் மேலாய்வு செய்யும் ஆய்வுக் களங்களைச் சுட்டிக் காட்டினார். முனைவர் அ. மணி அவர்கள் “திருக்குறள் கருத்தியலும் புதுமையியலும்” எனும் தலைப்பில் சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும் மீளவாசிப்பது குறித்த புத்தாக்கச் சிந்தனையை விதைத்துச் சென்றார்.
இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கில் பத்துக் கல்லூரிகள் காலந்து கொண்டன. பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவியர்களுக்குப் பரிசுத் தொகையினைக் கல்லூரி முதல்வர் முனைவர் பெ. இராஜகுரு அவர்கள் வழங்கி சிறப்புச் செய்தார்.
முனைவர் பொ. இராமநாதன், முனைவர் மூ. கவிதா, முனைவர் பி. ஸ்ரீதேவி ஆகியோர் கருத்தரங்க நிகழ்வினை ஒருங்கிணைத்துச் சென்றனர்.
நிகழ்வு நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது.